70’s-ஐ நினைவுபடுத்தும் ராயல் என்ஃபீல்டு புதிய மாடல்.! அட்டகாசமான புது அப்டேட்.!
ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டர் பியர் 650 ரக பைக்கை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.3.39 லட்சம் முதல் ரூ.3.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது ராயல் என்ஃபீல்டு ரக பைக்குகள். இந்த வகை பைக்குகள் முன்னர் வெகு சிலரிடம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது ராயல் என்ஃபீல்டின் புதுப்புது மாடல்கள், இந்தியா முழுக்க ஏரளமான ஷோ ரூம்கள் என அதன் விற்பனையை அதிகப்படுத்தி தற்போது இந்தியாவில் மோட்டார் வாகன விற்பனை சந்தையில் அந்நிறுவனம் முன்னிலையில் உள்ளது.
தற்போதும் புதுப்புது மாடல்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். ராயல் என்ஃபீல்டின் 650சிசி ரக பைக்குகளில் இன்டர்செப்டர் மாடலின் 5வது வெர்சனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.3.39 லட்சத்தில் இருந்து ரூ.3.59 லட்சம் வரை எக்ஸ் ஷோ ரூம் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாடல் முன்பு இருந்த இன்டர்செப்டர் மாடல் ரக பைக்குகளின் முக்கிய மாற்றங்களை கொண்டு , 1960’s – 1970’s-களில் வடிவமைக்கப்பட்ட பைக்குகளின் வடிவமைப்புகளை அடிப்படியாக வைத்து இன்டர்செப்டர் பியர் 650 (Interceptor Bear 650) வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ ரக பைக்குகளை விரும்பும் வாகன பிரியர்களுக்கு இந்த புதிய வெர்சன் ஓர் முக்கிய விருப்ப மாடல் பைக்காக அமையும் என கூறப்படுகிறது.
இந்த இன்டர்செப்டர் 650சிசி புதிய மாடல் 184மிமீ அளவு கிரவுண்ட் உயரத்தையும், 830 மிமீ அளவு வாகன உயரமும் கொண்டுள்ளது. டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை கொண்டுள்ளது. முழு-எல்இடி விளக்குகள், 19 இன்ச் முன்பக்க டயர், 17 இன்ச் பின்பக்க டயர்களை கொண்டுள்ளது.
பியர் 650யானது இன்டர்செப்டரின் வழக்கமான 648சிசி திறன் கொண்ட இன்ஜினை கொண்டுள்ளது. இது 7150 rpmமில் 47 php ஆற்றலையும், 5150 rpm-ல் 57 nm டார்க்கையும் இது வழங்குகிறது. இதன் எடை 216 கிலோவாக உள்ளது. இது முந்தைய இன்டர்செப்டர் 650 ஐ விட 2 கிலோ எடை குறைவாகும். இந்த புதிய இன்டர்செப்டர் பியர் 650 ரக பைக்குகள் விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.