ராயல் என்ஃபீல்டு நிறுவனம், வர்த்தக விரிவாக்கப் பணிகளுக்காக சென்னையில் ரூ.800 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், சென்னை அருகில் உள்ள தனது மோட்டார்சைக்கிள் ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் விதத்தில், விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை மிக கணிசமாக உயர்ந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வரலாற்றில் அதிகபட்சமாக கடந்த மாதம் 76,087 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனை படைத்தது.இதை மேலும் அதிகப்படுத்தவே இந்த புதிய திட்டம்.
உள்நாட்டு விற்பனை தவிர்த்து வெளிநாடுகளிலும் தனது வர்த்தகத்தை விரிவு படுத்தி வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இதனால், அதிகரித்து வரும் தேவையை மனதில் வைத்து சென்னை அருகே வல்லம் வடகல் பகுதியில் அமைந்துள்ள தனது மோட்டார்சைக்கிள் ஆலையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்ட விரிவுப்படுத்தும் பணிகளுக்காக கணிசமான அளவு முதலீடு செய்ய இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஆலை விரிவாக்கப் பணிகளை ஓர் ஆண்டில் முடித்து மோட்டார்சைக்கிள் உற்பத்தியை துவங்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.
வல்லம் வடகல் ஆலையில் தற்போது ஆண்டுக்கு 8.2 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்ய முடியும். புதிய உற்பத்திப் பிரிவுகள் துவங்கப்பட்டவுடன், உற்பத்தி திறன் ஆண்டுக்கு 9.5 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் என்ற அளவில் உயரும்.
ஆலை விரிவாக்கம் தவிர்த்து, சென்னையிலுள்ள தனது தொழில்நுட்ப மையத்தின் கட்டுமானப் பணிகளையும் இந்த ஆண்டு முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரைவாக விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
ஆலை கட்டுமானப் பணிகள் மட்டுமின்றி, புதிய மாடல்களை அறிமுகம் செய்வதிலும் ராயல் என்ஃபீல்டு கவனம் செலுத்தி வருகிறது.