ஹோண்டா சிட்டி டீசல் காரின் சிறப்பம்சம்..!
ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம். அண்மையில் விற்பனைக்கு வந்த புதிய ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
முதல்முறையாக டீசல் மாடலிலும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுவது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கிறது. அமேஸ் காரின் டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் மாடலுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் என்று ஹோண்டா நிறுவனம் ஆணித்தரமாக நம்புகிறது.
இந்த சூழலில், அமேஸ் போன்றே, ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடலிலும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகம் செய்ய ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹோண்டா அமேஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஹோண்டா சிட்டி காரிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சிவிடி மாடலை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் ஹோண்டா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதேநேரத்தில், ஹோண்டா அமேஸ் டீசல் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் 98.5 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஆனால், அமேஸ் காரின் அதே டீசல் எஞ்சின் கொண்ட சிவிடி மாடல் அதிகபட்சமாக 80 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனை மட்டுமே வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. எனவே, ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் மாடலானது குறைவான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
அதேநேரத்தில், அமேஸ் காரைவிட சற்று அதிகமாக இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. புதிய ஹோண்டா சிட்டி காரின் டீசல் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
அறிமுகம் செய்யப்படும்போது ஹூண்டாய் வெர்னா டீசல் சிவிடி மாடலுடன் நேருக்கு நேர் மோதும். ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் S மற்றும் V ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.