இது புதுசா இருக்கே.! வாகனங்களின் விலையேற்றத்தை அறிவித்த ஹீரோ..!
ஹீரோ: வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியான நிதியாண்டு தொடக்கநாளில் தான் வாகன நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையை உற்பத்தி செலவு, வரி ஆகியவற்றை கணக்கில் கொண்டு விலையேற்றம் செய்வார்கள். ஒரு சில சமயம் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் அந்தந்த நிறுவனங்கள் இடைப்பட்ட காலத்தில் விலையேற்றத்தை அறிவிக்கும்.
ஆனால், ஹீரோ நிறுவனம் தற்போது ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு விலையேற்றத்தை அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஹீரோ மோட்டோர்சைக்கிள் நிறுவனம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தங்கள் நிறுவன மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
வாகன உற்பத்தி உள்ளீட்டு செலவு அதிகரித்ததன் காரணமாக இந்த விலையேற்றம் குறிப்பிடப்படுள்ளது என்றும், ஒவ்வொரு வாகனத்தின் உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு அதிகபட்சமாக 1500 வரையில் மட்டுமே இந்த விலையேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட வாகனங்களுக்கு இந்த விலையேற்றம் இல்லாமல் கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஹீரோ நிறுவனம், முந்தைய மே 2023 மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு மே 2024 மாதம் கணிசமான அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்து. 2024 மே மாதம் 4,98,123 வாகனங்கள் விற்றுள்ள நிலையில், கடந்த 2023 மே மாதம் 5,19,424 வாகனங்கள் விற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதில், 2024 மே மாதம் 26,937 ஸ்கூட்டர் வாகனங்கள் விற்றுள்ளன என்றும், 2023 மே மாதம் 30,138 வாகனங்கள் விற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.