இண்டிகோ (INDIGO) மற்றும் கோ(Go) ஏர் நிறுவனங்களின் 65 விமான சேவைகள் ரத்து!
இண்டிகோ மற்றும் கோ(Go) ஏர் நிறுவனங்களின் 65 விமான சேவைகள், பழுதடையும் வாய்ப்புடையவை என்று கருதப்படும் என்ஜின்களைக் கொண்ட A320Neo ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர்பஸ் நிறுவனத்தின் A320Neo ரக விமானங்களை இந்தியாவில் இண்டிகோ மற்றும் கோஏர் விமான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கடந்த திங்கட்கிழமை அகமதாபாத்திலிருந்து லக்னோ புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் A320Neo ரக விமானம், என்ஜின் கோளாறால் அகமதாபாத்துக்கே திரும்பியது. A320Neo ரக விமானத்தில் இது முதல் கோளாறு அல்ல.
மேலும், அண்மைக்காலமாக இந்த ரக விமானங்கள் தொடர் பிரச்சனையை சந்தித்து வருவதால் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அத்துடன் PW1100 என்ஜின்களைக் கொண்ட A320Neo ரக விமானங்களின் இயக்க தடை செய்து உத்தரவிட்டனர். இதனால் இண்டிகோ நிறுவனத்தின் 8 விமானங்கள் மற்றும் கோ ஏர் நிறுவனத்தின் 3 விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கான 65 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
A320Neo ரக விமானங்களில் PW1100 ரகத்தைச் சேர்ந்த இரண்டு என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இரட்டை என்ஜின்கள் கொண்ட விமானத்தில் ஒரு என்ஜின் செயலிழந்தாலும் மற்றொரு என்ஜின் மூலம் ஆபத்துக்காலங்களில் தரையிறக்கலாம். என்றாலும் இது பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் செயல் என கூறப்படுகிறது. எனவே தான் A320Neo ரக விமானங்களுக்கு தடை விதித்துள்ளதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.