பிரேக் சிஸ்டத்தில் பிரச்சனை..! 7,000-க்கும் அதிகமான கார்களை திரும்ப பெற்ற மாருதி சுசுகி..!
மாருதி சுஸுகி நிறுவனம் 7,213 பலேனோ ஆர்எஸ் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் 7,213 பலேனோ ஆர்எஸ் வகை கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பிரேக் அமைப்பின் ஒரு பகுதியில் உள்ள குறைபாடு காரணமாக திரும்ப பெறப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி மற்றும் நவம்பர் மாதம் 1ம் தேதிக்கு இடையில் இந்த வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் வாகனத்தின் பிரேக் செயல்பாட்டிற்கு உதவும் வெற்றிட பம்பில் உள்ள குறைபாடு காரணமாக, சில சமயங்களில் ஓட்டுனர்கள் பிரேக்கை அதிக முறை மிதிக்கவேண்டியுள்ளது எனவும் மாருதி சுஸுகியின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வாகன உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு பிரச்சனைக்குரிய பாகங்களை இலவசமாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், இதனால் விபத்துக்கள் அல்லது காயங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, 2022-2023 நிதியாண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் ரூ.8,049 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மாருதி ரூ. 2,263.6 கோடி லாபம் ஈட்டியுள்ளது.