3 நொடியில் 100 கி.மீ ஸ்பீடு.. அசுர வேகத்தில் களமிறங்கிய BMW M 1000 XR.!
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது.
பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக திறன் கொண்ட பைக்குகளில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது பிஎம்டபிள்யு (BMW). இந்த பைக் மாடலின் 1000 சிசி புது ரக மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வெஞ்சர் ரக மாடல் பைக்காக களமிறங்கியுள்ள இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் 45 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை தற்போது தொடங்கப்பட்டாலும், வரும் ஜூன் மாதம் முதல் தான் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
999சிசி எஞ்சின் திறன் கொண்ட BMW M 1000 XR ஆனது, நான்கு இன்லைன் சிலிண்டர் எஞ்சின் திறன் கொண்டு இயக்கப்படுகிறது. இதன் மூலம் 201bhp திறன் மற்றும் 113Nm பவர் வெளிப்படுகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ்களை கொண்டுள்ளது.
இப்படியான 999சிசி எஞ்சின் திறன் கொண்டு 100 கி.மீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் அடைந்துவிடும் என கூறப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஸ்பீடு 278 கி.மீ ஆகும். இந்த மாடல் பைக்கில் மழை, சாலை, டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ என ஐந்து விதமாக ஒட்டிக்கொள்ளும் வசதி இந்த பைக்கில் உள்ளது.
6.5 இன்ச் TFT ஸ்கிரீன், ஹீட் கிரிப்ஸ், டைனமிக் பிரேக் கண்ட்ரோல், LED விளக்குகள் போன்ற பல்வேறு வசதிகளை M 1000 XR கொண்டுள்ளது. எந்த அளவு வேகம் இருக்கிறதோ அதே போல பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன. இந்த வாகன பிரேக்கிங்கில் இரட்டை முன்பக்கம் 320 மிமீ டிஸ்க்குகள் மற்றும் பின்பக்கம் 265 மிமீ பின் டிஸ்க்குகள் கொண்டுள்ளன.
மேலும், 45mm அளவுள்ள தலைகீழான முன் போர்க் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கார்பன் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறும் தொழில்நுட்பங்கள் இதில் பொருத்தப்பட்டு முந்தைய மாடலை விட 3 கிலோ அளவு எடை குறைக்கப்பட்டு இந்த M 1000 XR பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.