பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் பார்முலா இ மின்சார ரேஸ் காரின் படங்கள், தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவன வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த காரின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
பிஎம்டபிள்யூ iFE.18 என்ற பெயரில் இந்த கார் அழைக்கப்படுகிறது. ஜெர்மனியில் மூனிச் நகரில் உள்ள பிஎம்டபிள்யூ மற்றும் மினி டிரைவிங் அகாடமியில் வைத்து இந்த கார் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் டெஸ்ட் டிரைவர் டாம் புளோம்க்விஸ்ட் இந்த புத்தம் புதிய மின்சார ரேஸ் காரை ஓட்டி ஆய்வு செய்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் இப்போது வெளியாகி இருக்கின்றன.
வரும் 17ந் தேதி முதல் 19ந் தேதி வரை ஸ்பெயின் நாட்டின் கலஃபட் நகரில் நடைபெற இருக்கும் ஃபார்முலா இ டெஸ்ட் நிகழ்ச்சியில் இந்த புதிய பிஎம்டபிள்யூ மின்சார ரேஸ் கார் பங்கு கொள்ள இருக்கிறது.
இந்த புதிய பிஎம்டபிள்யூ ஃபார்முலா இ ரேஸ் கார் மாமடல் ஆன்ட்ரெட்டி ரேஸிங் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான ஃபார்முலா இ ரேஸ் கார்களைவிட இந்த கார் 55 சதவீதம் குறைவான எடையும், உருவத்தில் 66 சதவீதம் வரை குறைவானதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ ஐ3 மின்சார காரைவிட இந்த கார் 100 சதவீதம் கூடுதல் செயல்திறனையும், 400 சதவீதம் அதிக எஞ்சின் சுழற்சியையும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் அடுத்த மாதம் பெர்லின் நகரில் நடைபெற இருக்கும் பந்தயத்தில் ஓய்வுபெற்ற ஃபார்முலா -1 வீரர் நிகோ ரோஸ்பெர்க் இந்த காருடன் பங்கேற்க இருக்கிறார்.
ஃபார்முலா இ ரேஸ் துவங்கியது முதல் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐ3 மற்றும் ஐ8 கார்களை பாதுகாப்பு வாகனங்களாக பயன்படுத்த வழங்கி வருகிறது. இந்த நிலையில், முதல்முறையாக ரேஸ் காரையும் தயாரித்து களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.