கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் வீட்டை அலங்கரிக்கும் ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ்5 கார்..!
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியின் தலைவராக பணியாற்றி வரும் விராட் கோஹ்லி பரபரப்பான தனது பணிகளுக்கு நடுவில் நேற்று ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ்5 காரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஆடி இந்தியா கார் நிறுவனத்தின் விளம்பர தூதர் என்பதோடு, ஆடி கார்கள் மீது தீராத பிரியம் கொண்டதாலேயே, ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு மத்தியிலும் நேற்றைய தினம் புதிய ஆடி ஆர்எஸ்5 காரின் நிகழ்வில் விராட் கோஹ்லி கலந்து கொண்டார்.
இந்தநிலையில், நேற்று காரை அறிமுகம் செய்த கையோடு, இந்த புதிய மாடலின் முதல் காரை டெலிவிரியும் பெற்று, தான் ஒரு ஆடி கார் பிரியன் என்பதை மீண்டும் காட்டி இருக்கிறார். ரூ.1.10 கோடி விலையில் விற்பனைக்கு வந்த இந்த கார் ஆடி ஏ5 கார் மிகவும் சக்திவாய்ந்த மாடல்.
இந்த காரில் 2.9 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 444 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வாரி இறைக்கும் திறன் கொண்டது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.
இந்த சக்திவாய்ந்த கார் மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, 19 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பழைய மாடலைவிட இந்த கார் 60 கிலோ எடை குறைவானது.
ஆடி ஆர்எஸ்5 காரின் முதல் வாடிக்கையாளர் என்ற பெருமையை பெற்றிருக்கும் விராட் கோஹ்லியிடம் ஏற்கனவே ஆர்எஸ்6, ஏ8எல், ஆர்8 வி10, க்யூ7 எஸ்யூவி உள்ளிட்ட பல உயர்வகை ஆடி கார்கள் இருக்கின்றன.