ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்ஸ் கூபே(Audi RS 5 Sports Coupe) இப்போது இந்தியாவிலும்..!!
ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்ஸ் கூபே(Audi RS 5 Sports Coupe) ரக கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி இந்த புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஆடி ஏ5 மற்றும் எஸ்5 கார்களின் குடும்பத்தில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக ஆர்எஸ்5 விற்பனைக்கு வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருந்த முதலாம் தலைமுறை ஆர்எஸ்5 காரைவிட இந்த புதிய மாடல் 60 கிலோ எடை குறைந்துள்ளதால், அதிக செயல்திறன் கொண்ட மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
சாதாரண ஆடி ஏ5 காரிலிருந்து வேறுபடுத்தும் விதமாக மிரட்டும் பம்பர் அமைப்பு, பெரிய ஏர்டேக் மற்றும் பெரிய க்ரில் அமைப்புடன் தனித்துவத்தை பெறுகிறது. புதிய ஆடி ஆர்எஸ்5 காரில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
19 அங்குல அலாய் சக்கரங்கள் நிரந்தர அம்சமாகவும், 20 அங்குல அலாய் சக்கரங்கள் விருப்ப தேர்வாகவும் வழங்கப்படுகிறது. புதிய ஆடி ஆர்எஸ்5 காரில் 2.9 லிட்டர் வி6 ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 444 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
புதிய ஆடி ஆர்எஸ்5 கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும். இந்த காரில் பல்வேறு நிலைகளில் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஓட்டுனரை சேர்த்து 4 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த கார் தினசரி பயன்பாடு மற்றும் ரேஸ் டிராக்குகளில் ஓட்டுவதற்கான பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் வந்துள்ளது.
புதிய ஆடி ஆர்எஸ்5 கார் இந்தியாவில் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரூ.1.10 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.