மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களை ஓரம் கட்ட புதிய திட்டம் வகுக்கும் ஆடி கார் நிறுவனம்
இந்தியாவில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க குறைவான விலை சொகுசு கார்களை அறிமுகம் செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, தனது ஏ3 செடான் கார் மற்றும் க்யூ3 எஸ்யூவி மாடல்களைவிட குறைவான விலை காரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க போவதாக தெரிவித்துள்ளது. தற்போது கைவசம் உள்ள க்யூ2 க்ராஸ்ஓவர் மாடல் இந்திய மார்க்கெட்டிற்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறது.
வடிவமைப்பில் மிக ஸ்டைலான இந்த கார் ஆடி கார் பிரியர்களை மட்டுமின்றி, சொகுசு கார் பிரியர்களையும், முதல்முறையாக சொகுசு கார் வாங்க திட்டம் போடுபவர்களையும் எளிதாக வளைத்து போட்டுவிடும்.
இதன் உட்புறத் தோற்றம் மிக பிரிமியமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், விர்ச்சுவல் காக்பிட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கும். பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லாத காராக இருக்கும். இந்த கார் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் திறனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். பெட்ரோல் மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 7 ஸ்பீடு எஸ்-டிரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, புதிய ஆடி க்யூ2 காரை ரூ.22 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விற்பனையை கணிசமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, நம்பர்-1 இடத்தை பிடிக்க வழியும் கிடைக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறது ஆடி. ஆடி க்யூ2 காரை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம் போட்டுள்ளது.