அரியலூர் பட்டாசு ஆலை தீ விபத்து.! பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு.!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.  இதில் தீ காயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது வரை பட்டாசு ஆலை தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். அதில் 3 பேர் பெண்கள் எனவும் , ஒருவரது உடல் பாகங்கள் சிதறி கிடப்பதால், அந்த உடல் ஆணா பெண்ணா என தெரியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பளார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சுமார் 3 மணிநேரமாக தீ விபத்து பட்டாசு ஆலையில் நீடித்துள்ளது. அதனை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் 9 இரு சக்கர வாகனங்கள், ஒரு டிராக்டர், ஒரு சரக்கு வாகனம் ஆகியவை முற்றிலும் சேதமடைந்து விட்டது.

படுகாயமடைந்தோர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக 5 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.