உலக பணக்காரர் பட்டியலில் கூகுள் துணை நிறுவனரை பின்னுக்குத்தள்ளிய அம்பானி!

உலக பணக்காரர்கள் பட்டியலில் கூகுள் துணை நிறுவனர் லாரி பேஜை பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி, 6ஆம் இடத்திற்கு முன்னேறினார்.

உலகளவில் முகேஷ் அம்பானி என்ற பெயர் அனைவரும் அறிந்ததே ஆகும். ஆசியா மற்றும் இந்தியாவை பொருத்தவரை முதல் பணக்காரராக இருந்து வந்தார். கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள், கடும் சரிவை சந்தித்து வருகின்றது. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், தனது 25.20 விழுக்காடு பங்குகளை விற்று, 1,18,318 கோடி ரூபாய் நிதி திரட்டியது.

மேலும், சில நாட்களுக்கு முன், அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஜியோ நிறுவனத்தில் 0.15% பங்குகளை வாங்கியது. இதன்விளைவாக அம்பானியின் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது.

இதனால் அவரின் சொத்துமதிப்பு மொத்தம் 72.4  பில்லியன் டாலராக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, 6ஆம் இடத்தில் இருந்த கூகுள் துணை நிறுவனர் லாரி பேஜை பின்னுக்கு தள்ளி, அம்பானி முன்னேறினார். லாரி பேஜின் சொத்து மதிப்பு, 71.6 பில்லியன் டாலராகும்.

மேலும், ப்ளூம்பெர்க் பில்லியனர்கனின் பட்டியலின்படி, முதல் இடத்தில் ஜெஃப் பெசோஸ் (184 பில்லியன் டாலர்), இரண்டாம் இடத்தில் பில் கேட்ஸ் (115 பில்லியன் டாலர்), மூன்றாம் இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட் (94.5 பில்லியன் டாலர்), மார்க் ஜுக்கர்பெர்க் (90.8 பில்லியன் டாலர்), மற்றும் ஸ்டீல் பால்மர் (74.6 பில்லியன் டாலர்) ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.