முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை- அமைச்சர் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு  முயற்சிகளும் எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீர் வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,  முல்லைப் பெரியாறு அணையை நான் 05.11.2021 அன்று பார்வையிட்டு பொறியாளர்களுக்கு அணையில் நீர்த்தேக்குவது பற்றிய அறிவுரைகளை வழங்கினேன். பருவ மழை காலத்தில், குறிப்பாக வெள்ள காலங்களில், காலமுறைப்படி வரும் வெள்ள நீரை தேக்கி வைத்து முறைப்படுத்துவதற்கு ஏதுவாக, அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து. அதன்படி அணையின் நீர்மட்டத்தை முறைப்படுத்துவது மாதவாரியான நீர்மட்ட அட்டவணை (Rule Curve) ஆகும்.

இதில் பருவ மழை காலங்களில் ஜூன் 10-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரையில் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் அணையின் நீர்மட்டம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. மத்திய நீர்வளக்குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதவாரியான நீர்மட்ட அட்டவணைப்படி அணையில் இன்று 30.11.2021 காலை 142 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது.

அணைக்கு அதிகமாக நீர்வரத்து இருக்கும் நாட்களில், நிலையான வழிக்காட்டுதலின்படி (Standard Operating Procedure) சம்பந்தப்பட்ட கேரள அதிகாரிகளுக்கு முன்னரே தெரியப்படுத்திய பின்னரே, அணையின் நீர் வழிந்தோடி மதகுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவது படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது.

07.05.2014-ல் உச்சநீதிமன்றம் 142 அடி வரை தேக்கலாம் என ஆணையிட்ட பின்னர். நான்காவது முறையாக 30.11.2021 இன்று அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை முடித்த பின்னர் அணையின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம். இதற்கு சில இடையூறு இருந்தாலும், அப்பணிகளை முடிக்க, தொடர்ந்து எல்லாவிதமான முயற்சிகளும் நடவடிக்கைகளும் முதலமைச்சருடன் கலந்து பேசி எடுக்கப்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

author avatar
murugan