” சீமராஜா தப்பான படம் ” சூரி வேதனை..!!
‘சீமராஜா’ தப்பான படம் கிடையாது என வேதனையுடன் தெரிவித்துள்ளார் சூரி.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ம் தேதி ரிலீஸான படம் ‘சீமராஜா’. பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடித்தார். ‘நன்றாக இருக்கிறது’, ‘நன்றாக இல்லை’ என இரண்டுவிதமான விமர்சனங்களும் இந்தப் படத்துக்குக் கிடைத்தன.
“ஈசல் மாதிரி ஏகப்பட்ட பேர் சமூக வலைதளங்களில் ‘சீமராஜா’ படத்தை விமர்சனம் செய்திருக்கின்றனர். ஒரு படத்தைக் கட்டம் கட்டிக் காலி பண்ண வேண்டும் என்பது மாதிரி இருந்தது. நான் பத்திரிகையாளர்களைச் சொல்லவில்லை. ஆன்லைனில் விமர்சனம் பண்றவங்களைச் சொல்றேன்.
கேமரா வச்சிருந்தா, விமர்சனம் என்ற பெயரில் எதையாவது சொல்லலாம் என நினைத்துவிட்டார்கள் போலும். இவ்வளவு பேரும் எதிர்மறை விமர்சனம் பண்ற அளவுக்கு ‘சீமராஜா’ தப்பான படம் கிடையாது. ஆன்லைனில் விமர்சனம் செய்பவர்கள், கொஞ்சமாவது மனசாட்சியுடன் விமர்சனம் செய்ய வேண்டும்.
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல், ‘வாடா’, ‘போடா’, ‘என்ன படம் எடுத்துருக்காங்க’, ‘கதையும் இல்ல… ஒண்ணும் இல்ல…’ என்று பேசக்கூடாது. அதேபோல், விமர்சனம் என்ற பெயரில் படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிடக் கூடாது.
‘தோற்க வேண்டும்’ என்று திட்டமிட்டு யாருமே படம் எடுப்பது இல்லை. ஒரு சீன் எடுக்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பாருங்கள். ஆன்லைனில் விமர்சனம் பண்ற நீங்களும், அதுமூலமாக வரும் வருமானத்தில்தானே சாப்பிடுகிறீர்கள். சினிமாவில் இருந்துகொண்டே, சினிமாவை அழிப்பதுதான் உங்கள் வேலையா?
தயவுசெய்து யார் மனதையும் கஷ்டப்படுத்தாமல் விமர்சனம் செய்யுங்கள். ‘ஒரே மாதிரி படம் எடுக்குறாங்க’னு சொல்றீங்க. ஆனால், உங்கள் விமர்சனத்தில் படத்தின் பெயர் மட்டும்தான் மாறுகிறது. வார்த்தைகள் எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன. முதல் வாரத்தில் பயன்படுத்திய வார்த்தைகளை, அடுத்த வாரத்தில் பயன்படுத்தாமல் விமர்சனம் செய்யுங்கள் பார்ப்போம்.
தியேட்டர் பக்கம் சினிமா ரசிகர்கள் போகக்கூடாது என்று நினைத்தே விமர்சனம் செய்கிறீர்களே… உங்களுக்கு தயாரிப்பாளர்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? தயவுசெய்து சினிமாவை வாழவையுங்கள்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் சூரி.
DINASUVADU