“மோடி மீண்டும் மீண்டும் வெற்றி பெற முடியாது” ராகுல் காந்தி சாடல்..!!
புதுதில்லி, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் ஒற்றைக் கொள்கை திணிக்கப்பட்டு வருவதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். ஒற்றை எண்ணத்தின் அடிப்படையில் நாடு இயங்க முடியாது என்றும் அவர் கூறினார். தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வித்துறை நிபுணர்கள் மாநாட்டில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: நாங்கள் தேசத்தை ஒருங்கிணைக்கப் போகிறோம்’ என்று ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசி வருகிறார். தேசத்தை ஒருங்கிணைக்க அவர் யார்? தேசம் தன்னைத்தானே ஒருங்கிணைத்துக் கொள்ளும்.
இன்னும் அடுத்த சில மாதங்களில் அவர்களது பிம்பம் உடைந்துபோகும். அவர்களுக்கான தேர்தல் களம் என்னவென்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்துவிட்டனர். அதில் அவர்கள் ஒரு முறை வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், மீண்டும், மீண்டும் வெற்றி பெற முடியாது. அதை தெளிவாக உணர்ந்த காரணத்தினால் தான், தேர்தல் என்பது வரும், போகும் என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்திய அரசமைப்புகளை கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.
கல்வி நிலையங்கள், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் ஏற்கெனவே அவர்களால் கைப்பற்றப்பட்டு விட்டன. கருத்துரிமை இல்லை: நாட்டில் ஒற்றைக் கொள்கை திணிக்கப்பட்டு வருவதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். உங்கள் மீது ஓர் கொள்கை திணிக்கப்பட்டு வருவதை நீங்கள் உணர முடியும். இந்த உணர்வும், வலியும் உங்களுடைய இதயத்தில் மட்டுமல்லாமல், விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவரது இதயங்களிலும் ஏற்பட்டுள்ளது. நாடு ஒற்றை எண்ணத்தின் அடிப்படையில் இயங்க முடியாது. பல கருத்துக்கள் குறித்து விவாதிக்க பொது மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அதுதான் நமது நாட்டின் பலமே தவிர, அதுவே பலவீனம் அல்ல. நாட்டின் 3,000 ஆண்டு வரலாற்றை திரும்பி பார்த்தோம் என்றால், நாமே வெற்றி பெறவுள்ளவர்கள் என்பதும், தோல்வி அடைய வேண்டியவர்கள் அல்ல என்பதும் புரியும் என்றார் ராகுல் காந்தி.
DINASUVADU