“இனி 3 கேமராக்கள்” அசத்தும் சாம்சங் கேலக்ஸி ஏ7 ..!!
சாம்சங் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்திய சூடு தணியும் முன்னரே சாம்சங் கேலக்ஸி ஏ7 எனும் ஸ்மார்ட் போனையும் அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம்.
பின்புறம் 3 கேமராக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.ஒன்று பின்புறக் கேமராக்களுடன் சாம்சங் அறிமுகப்படுத்தும் முதலாவது ஸ்மார்ட் போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.பின்புறம் வழங்கப்பட்டுள்ள கேமராக்களில் 8 மெகாபிக்சல் 24 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் தெளிவு திறன்களைக் கொண்ட கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் வழங்கப்பட்டுள்ள 8 மெகாபிக்சல் கேமரா 120 பாகை கோணத்தில் புகைப்படங்களை எடுக்க கூடியதாகும். இது மனிதனுடைய கண்களுக்கு புலப்படக்கூடிய கோணத்திற்கு நிகரானதாகும்.
மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா, நீங்கள் எடுக்கக்கூடிய புகைப்படங்களுக்கு “பொக்கே எஃபெக்ட்” வழங்கக் கூடியதாகும்.
மேலும் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 24 மெகாபிக்சல் கேமரா வெளிச்சம் குறைந்த இடங்களிலும் கூட தெளிவான புகைப்படங்களை எடுப்பதற்காக விஷேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 24 மெகாபிக்சல் திறனுடன் கூடிய முன்பக்க கேமராவும் இந்த ஸ்மார்ட் போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ7 ஏனைய வசதிகள்:
இது 6 அங்குல திரையை கொண்டுள்ளதுடன் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
மேலும் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் சிப்செட், 6 ஜிபி வரையான ரேம், 128 ஜிபி வரையான உள்ளக நினைவகம், 3300mAh வலுவான பேட்டரி போன்றவைகள் இதற்கு வழங்கப்பட்டுள்ளன.
இது முதற்கட்டமாக ஆசியா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் விற்பனைக்கு விடப்படவுள்ளது. இருப்பினும் இதுவரை இதன் விலை விபரம் தொடர்பான தகவல்களை சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை.
DINASUVADU