பயணிகள் பாதுகாப்பு முக்கியம்:ரயில்வே அமைச்சர் கோயல்
புதுடில்லி: ரயில் பயணிகள் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம். பணம் பிரச்னையில்லை என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். ஆலோசனை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் புறநகர் பகுதியான, பரேலில் உள்ள எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலைய நடைபாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 23 பேர் பரிதாபமாக பலியாயினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக மும்பையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அதிகாரிகளுடன் 9 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதிகாரம்: இந்த கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்த ஆலோசனைகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பயணிகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்படும். பாதுகாப்புக்கு முக்கியத்துவத்திற்கு தேவையான பணத்தை செலவழிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இது வெறும் மன்னிப்பு மட்டுமல்ல. ஆனால், ரயில்வே துறையில் உள்ள பிரச்னைகள் ஒராண்டு அல்லது இராண்டாக மட்டும் இருக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக இருக்கும் பிரச்னைகள், கடந்த 2014ல் எங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. மும்பை புறநகர் பயணிகள் ஒவ்வொருவரும் ராஜ்தானி பயணிகள் போல் முக்கியமானவர்கள்.
அவர்களையும் கவுரவமாக நடத்த வேண்டும். மும்பை புறநகர் ரயில் நிலையத்தில் கூடுதல் தானியங்கி படிக்கட்டுகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும். இதற்கான திட்ட செலவு குறித்து 15 நாளில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.