‘தப்பு செஞ்சா அவ்ளோதான்’ ‘அதிகாரிகளுக்கு எச்சரிக்கை’ அதிரடியில் இறங்கிய அமைச்சர்..!!
`தவறு செஞ்சா நடவடிக்கைதான்..!’ – வன அதிகாரிகளை எச்சரிக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
தேக்கு மரங்கள் வெட்டுவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள் , அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பொருணை பூங்காவுக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காகவும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளவும் நெல்லைக்கு வருகை தந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,“பாபநாசத்தில் நன்னீர் மீன்கள் அருங்காட்சியகம் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைய இருக்கிறது. அத்துடன், ரூ.35 லட்சம் மதிப்பில் பொருணை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த இரு திட்டங்களும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட இருக்கிறது.
பாபநாசத்தில் அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் நபர்களுக்கு வனத்துறை சார்பில் சூழலியல் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது, ஆனால், இந்தக் கட்டணத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களின் கோரிக்கையை ஏற்று சூழலியல் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் மான் பூங்காவை களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வனத்துறையில் பணியாற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்களைப் பணிநிரந்தரம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, இரண்டு வனத்துறை ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வன விலங்குகள் தாக்கி உயிர் இழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. விலங்குகளால் சேதம் அடையும் விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதைத் தடுக்கும் வகையில், அவற்றை சுட்டுக் கொல்ல வனத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் விவசாயிகள் புகார் அளித்தால் வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்’’ என அமைச்சர் தெரிவித்தார்.
DINASUVADU