“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
தவெக தொண்டர்கள், தான் வந்த வேன் மீது குதித்தது, தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனத்தில் சென்றது ஆகியவை தனக்கு கவலை அளிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய் கோவை வந்தபோது தவெக தொண்டர்கள் விஜய் ‘ரோடு ஷோ’ சென்றார். அப்போது தொண்டர்கள் சிலர் அவர் சென்ற வேன் மீது ஏறி விழுந்து விஜயை பார்க்க முண்டியடித்து கொண்டு சென்றனர்.
பலர் அவரது வேன் அருகே தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றனர். விஜய் வந்த வேன் மீது சிலர் அருகில் உள்ள மரத்தில் இருந்து ஏறி குதித்தது, தலைக்கவசம் அணியாமல் சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது வருத்தத்தை சமூக வலைதள பக்கம் வாயிலாக பேசினார்.
அதில்,”என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்.
நம்மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.
அதனால் இப்போது கொஞ்சம் உங்களிடம் மனசு விட்டு பர்சனலாக பேச விரும்பறேன். நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும். இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும்
உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ், அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன். ஆனால் எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும். எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்
நீங்கதான் எனக்கு விலைமதிப்பில்லா சொத்து. இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல. உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்
உங்க அன்பை நான் மதிக்கறேன். இனி எப்பவும் மதிப்பேன். அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது. நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க தப்பே இல்ல.
நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும், சுய கட்டுப்பாடும் முக்கியம். 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்.
இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால, நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன். செய்வீங்க. செய்றீங்க. ஓகே?” என அந்த அறிக்கையில் அவர் பதிவிட்டுள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.
மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you…
— TVK Vijay (@TVKVijayHQ) April 30, 2025