“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!
பஹல்காம் தாக்குதல் போன்று இனி நடைபெறாது என நம்புகிறேன். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் . நாம் ஒற்றுமையாக இருப்போம் என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து உள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பதம்பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்.
அதன் பிறகு ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பஹல்காம் தாக்குதல் குறித்த தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில்,”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காது என நம்புகிறேன், அதற்காக பிரார்த்தனை செய்கிறேன், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன். நாம் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம், ஒருவர் ஒருவருடன் அனுதாபம் கொள்ள கற்றுக்கொள்வோம், நாம் நம் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து அமைதியான சமூகமாக வாழ வேண்டும்.
இன்று (திங்கட்கிழமை) ஆயுதப்படையை சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு நாம் தலை வணங்குகிறோம் என்பதை அவர்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், அதனால், நாம் நிம்மதியாக தூங்குகிறோம்.அவர்கள் அழகான வாழ்க்கையை வாழ்த்துகிறேன். அவர்கள் நம் எல்லைகளை பாதுகாப்பதில் அயராது உழைக்கிறார்கள், குறைந்தபட்சம் அவர்களின் மரியாதைக்காக நாம் ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சாதியையும் மதிக்கவும், இந்தியாவில் குறைந்தபட்சம் நமக்குள் சண்டையிடாமல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அமைதியான சமுதாயமாக இருப்போம்.” என நடிகர் அஜித்குமார் ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.