தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!
மதுரை தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் குழந்தை உயிரிழந்ததை அடுத்து பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை பயின்று வந்துள்ளது. இக்குழந்தை இன்று பள்ளியில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருக்கும் போது பள்ளி வளாகத்தில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் தவறுதலாக விழுந்துவிட்டது.
உடனடியாக அக்குழந்தை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஆருத்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை அடுத்து காவல்துறையினர் பள்ளி தாளாளர் திவ்யா பத்ரி லட்சுமியை கைது செய்தனர்.
மேலும், குழந்தையை கவனிக்க தவறியதாக அங்குள்ள 6 ஆசிரியர்கள் மற்றும் 2 பணியாளர்கள் என மொத்தம் 6 பேரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். சம்பவம் அறிந்து தனியார் பள்ளிக்கு விரைந்த காவல் துணை ஆணையர் அனிதா, வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி உள்ளிட்டோர், பள்ளியை ஆய்வு செய்து சீல் வைத்தனர்.