“யார்டா நீங்கெல்லாம்.?” இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!
இந்திய ராணுவத்திற்கு நன்கொடை அனுப்பக்கோரி வாட்ஸ்அப்பில் போலி தகவல் பரவுகிறது என மத்திய பாதுகாப்புத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா வருவது வாடிக்கையாகி வருகிறது. அதனை தடுக்க அரசும் உரிய முயற்சி எடுத்துவந்தாலும் அந்த போலி செய்திகள் பரவல் குறைந்தபாடில்லை. அப்படியான ஒரு செய்தி தான், பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவத்திற்கு நிதி கேட்டு ஒரு போலி செய்தி வாட்ஸ்அப்பில் பரவியுள்ளது.
இந்திய ராணுவத்திற்கான ஆயுதங்களை நவீனபடுத்தவும், இந்திய ராணுவத்தை மேம்படுதவும் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மோடி அரசு தொடங்கியுள்ளது. இதில் ரூ.1 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் பணப்பரிமாற்றம் செய்யலாம் என பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பரிந்துரைப்பது போல அந்த செய்தி பரவி வந்துள்ளது.
இதனை கண்டு பதறிய மத்திய பாதுகாப்புத்துறை உடனடியாக மத்திய பத்திரிகை தகவல் பணியகம் – PIB மூலமாக உண்மையை விளக்கியுள்ளது. அதில், PIB நடத்திய உண்மைச் சரிபார்ப்பில், இந்தச் செய்தி போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தை நவீனமயமாக்குவதற்காக அரசாங்கம் ஒரு வங்கிக் கணக்கைத் திறந்துள்ளதாக ஒரு வாட்ஸ்அப் போலி செய்தி பரவி வருகிறது. இந்த கூற்று தவறானது. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கு இந்திய ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கோ அல்லது ஆயுதங்கள் வாங்குவதற்கோ அல்ல என்று PIB விளக்கியுள்ளது.
மேலும், பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் பரிந்துரைத்ததாகவும், மோடி அரசின் மற்றொரு நல்ல முடிவு எனக்கூறி இந்திய ராணுவத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டும் செலுத்துங்கள். என்றும், இந்த முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும், போர் மண்டலத்தில் காயமடைந்த அல்லது தியாகம் செய்யும் வீரர்களுக்கும் மோடி அரசு ஒரு வங்கிக் கணக்கைத் திறந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு இந்தியரும் தங்கள் விருப்பப்படி நன்கொடை அளிக்காலாம் என்றும், இந்த பணம் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு ஆயுதங்களை வாங்கவும் பயன்படுத்தப்படும் என்றும் அந்த போலி செய்தியில் கூறப்பட்டுள்ளது என PIB விளக்கம் அளித்துள்ளது. அதனால் மக்கள் விழிப்புடன் இருந்து இம்மாதிரியான போலி செய்திகளை தவிர்க்குமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025