பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!
கோவை விமானநிலையத்தில் டிராலிகள் உள்ளிட்ட பொருட்களைச் சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழக (தவெக) உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள், ட்ராலி ஆகியவற்றை உடைத்ததாக தவெக தொண்டர்கள் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தவெக பூத் கமிட்டி மாநாடு நேற்று, இன்றும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவை விமான நிலையம் வந்த அக்கட்சியின் தலைவர் விஜயை, தவெக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சுமார் 2,000 பேர் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினர். வடக்கில் தொடங்கிய கட்சி பணிகள் கொங்கு பகுதி வழியாக பயணிப்பது அரசியல் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில்,முன்னறிவிப்பு இல்லாமல் அதிக அளவில் மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கார், பைக் உள்பட 133 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கோவை மாநகர் தவெக மாவட்ட செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.