காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!
பஹல்காம் தாக்குதல் தொடர்பான நடுநிலையான விசாரணைக்கு நாங்கள் தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது. இந்த TRF அமைப்பு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு என்றும், இதனால் பாகிஸ்தானுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது என்று இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதனால் வர்த்தகம், விசா, எல்லை பங்கீடு என இரு நாடு உறவுகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கூறி வரும் பாகிஸ்தான் அரசு தற்போது அதற்கான விசாரணைக்கு தயார் என கூறியுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் நியூயார்க் டைம்ஸிடம் அளித்த பேட்டியில், சர்வதேச நடுநிலையாளர்கள் நடத்தும் எந்தவொரு நடுநிலை விசாரணைக்கும் பாகிஸ்தான் ஒத்துழைக்க தயாராக உள்ளது என்று தெரிவித்தார். தற்போது அதே கருத்தை பாகிஸ்தான் பிரதமரும் முன்வைத்துள்ளார்.
அண்மையில், பாகிஸ்தான் அபோதாபாத்தில் உள்ள ஒரு இராணுவ அகாடமியில் நடந்த விழாவில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசுகையில், ” பஹல்காம் தாக்குதல் தொடர்பான எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. என தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் எந்தவொரு தவறான தாக்குதலுக்கும் எதிராக பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முழு திறனுடன் தயார்நிலையில் உள்ளது எனவும் பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.