சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ராஜரத்தினம் என்பவரது பெயரில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்த்தில் கட்டங்கள் தரைமட்டமாகி உள்ளன என்றும் இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அங்கு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், கட்டடங்கள் சேதமடைந்து இருப்பதாலும் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.