தவெக பூத் கமிட்டி மாநாடு : எங்கு எப்போது? விஜய் வருகை., முக்கிய விவரங்கள் இதோ…
தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் 2 நாள் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அக்கட்சி தலைவர் விஜய் கோவை புறப்பட்டார்.

சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் தவெக கட்சியும் தங்கள் தேர்தல் பணிகளை பெரிய கட்சிகளுக்கு இணையாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், ஐடி விங் நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் ஆகியவற்றை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தது போல 2 நாள் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் இன்றும் நாளையும் கோவையில் நடைபெறுகிறது. கோவை அவிநாசி சாலையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இந்த 2 நாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
விஜய் வருகை :
இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டார். கோவை விமான நிலையத்தில் விஜயை வரவேற்க அவரது தொண்டர்கள் குவிந்துள்ளனர். கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் தாங்கும் விடுதியில் தங்குகிறார். பிறகு 3 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் கல்லூரிக்கு செல்கிறார்.
10 ஆயிரம் பேர் பங்கேற்பு :
மாநாடு இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் 18 மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் 10 ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
கல்லூரி வளாகம் என்பதால், வளாகத்திற்கு உள்ளே கட்சிக் கொடி உள்ளிட்ட கட்சி சார்ந்த பொருட்கள் அனுமதி இல்லை என கூறப்படுகிறது. இங்கு 3 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று பூத் கமிட்டி அடையாள அட்டை வைத்துள்ள நிர்வாகிகள் , 2வது சிறப்பு விருந்தினர்கள் செல்லும் பாதை, 3வது கட்சித் தலைவர் விஜய் செல்வதற்கான பாதை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் இன்று Y பிரிவு பாதுகாப்புடன் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.