CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!
சென்னை சேப்பாக்கத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முகமது சமியின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சாம் கரன் 9 ரன்களில் வெளியேற, அடுத்து ஆயுஷ் மத்ரே 30 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்களிலும் அவுட் என அடுத்தடுத்து வீரர்கள் குறைந்த ரன்னில் அவுட் ஆகி வெளியேற டெவால்ட் ப்ரீவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். சிவம் துபே 12 ரன்களில் வெளியேற கேப்டன் தோனி 6 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
தீபக் ஹூடா 22 ரன்கள் அடித்து இறுதியில் அவுட் ஆகினார். 19.5 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. SRH அணி 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் SRH அணி அடுத்து களமிறங்கியது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 44 ரன்கள் அடித்தார். ஹெட் (19), அபிஷேக் சர்மா (0), கிளாசென் (7), அனிகெட் வர்மா (19 ரன்கள்) என அடுத்தடுத்து வெளியேறினர். கமிந்து மெண்டிஸ் 32 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களும் எடுத்து இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தனர்.
18.4 ஓவரில் இலக்கை எட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல்-ல் பிளே ஆப் சுற்று செல்லும் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இழந்துள்ளது.