வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
அரசு கேபிள் சேவை செயல்படுத்தி வருவது போல, வீடுதோறும் 100 Mbps வேகத்தில் ரூ.200-க்கு இணைய சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்தார்.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகள் பற்றியும் பேசினர்.
அதில், தகவல் தொழில்நுப்டம் துறை ரீதியில் உள்ள முக்கிய அறிவிப்பை அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் அறிவித்தார். அதில், வீடுதோறும் மாதம் ரூ.200-க்கு 100 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை பற்றி அறிவித்தார்.
அதுபற்றி கூறுகையில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறையின் மூலமாக ஏற்கனவே அரசு கேபிள் டிவி சேவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல வீடுதோறும் இணைய சேவை வசதியை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முதற்படியாக இதுவரை ஏற்கனவே 2000 அரசு அலுவலகங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 4700 கிராம பஞ்சாயத்துகளில் இன்டர்நெட் வசதி வேண்டும் என்ற விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதன் அடுத்தபடியாக வீடுதோறும் 100 MBPS இணைய வேகத்தில் ரூ .200 கட்டணத்தில் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.