ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!
உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் 9 துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது.
உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். தற்பொழுது, துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விமானம் மூலம் ஜெகதீப் தன்கர் கோவை வருகிறார்.
இந்த நிலையில், உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பதாக அறிவித்த சில நிமிடங்களில், தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் புறக்கணிப்பாதக அறிவித்துள்ளனர்.
அதன்படி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் சந்திரசேகர் பாதியிலேயே நெல்லை திரும்பினார். மேலும், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை. பொறுப்பு துணைவேந்தரும் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காமராஜர், பாரதியார், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலை.யில், 6 பல்கலைக்கழகங்களில் மட்டுமே துணைவேந்தர்கள் உள்ளனர். 52 பல்கலைக்கழகங்களில் 41 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 9 பேர் பங்கேற்றுள்ளனர். அந்த 9 பேரும் ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆவர்.
இப்போது, துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கவிருக்கிறது. இதனிடையே, மாநில அரசின் உரிமையை ஆளுநர் பறிப்பதாக கூறி, ஆளுநரைக் கண்டித்து உதகையில் திராவிடர் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்ளனர்.