எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!
இந்திய எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் நிலைகளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நேற்று உதம்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது, பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களால் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
அதைத் தொடர்ந்து, இந்தியாவும் பதிலடி கொடுத்தது. அப்பொழுது யாருக்கும் காயமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும், இந்த சம்பவம் 26 சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து வந்துள்ளது.
இதனிடையே, பாசிபோரா பகுதியின் காடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தேடுதல் நடவடிக்கை துப்பாக்கிச் சண்டையாக மாறியது. நேற்றைய தினம் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் கூட்டுப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் இந்திய சிறப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார்.