இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…
பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதியை நிறுத்திய முடிவை நாங்கள் போராக கருதுகிறோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையான தொடர் ‘தடை’ நடவடிக்கைகள் இரு நாட்டு உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. இரு நாடுகளும் பதிலுக்கு பதில் தடை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலை நடத்தியது காஷ்மீரில் செயல்பட்டு வரும் TRF தீவிரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு என்ற குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன் அடிப்படையிலேயே பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு துறை அமைச்சக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீர் பங்கீட்டை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள் இந்தியா வரும் விசா சேவை நிறுத்தப்பட்டது. ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 27ஆம் தேதிக்குள் அவர்கள் நாட்டிற்கு செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ விசா வைத்துள்ளவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 29வது காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல இருநாட்டு வர்த்தக உறவுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் பொருட்டு அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழுவின் (NSC) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியாவுக்கு எதிராக முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிப்பகிர்வை நிறுத்திய முடிவை போராக கருதுவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை பாகிஸ்தான் மூடியது. ஏற்கனவே இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை விதித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தகத்தை முழுவதுமாக நிறுத்துவதாகவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்தியர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
சிந்து நதியிலிருந்து தண்ணீர் வழங்குவதை நிறுத்த இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கையாக கருதுவதாகவும், 1960 ஒப்பந்தத்தின் படி சிந்து நதி பாகிஸ்தானில் 240 மில்லியன் குடிமக்களுக்கு உயிர்நாடியாக உள்ளது என்றும் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.