பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 3 பாகிஸ்தானியர் உட்பட மொத்தம் 5 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் தீராத சோகமான சம்பவமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (NIA) முதன்மையாக நடத்தி வருகிறது.
ஏற்கனவே, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடமும் வெளியிடப்பட்டியிருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது இந்த தாக்குதலுக்கு பின்னால் 5 தீவிரவாதிகள், 3 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில், 5 முதல் 6 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருகிறார்கள். இந்த 5 தீவிரவாதிகளில் 3 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என உளவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 2 பேர் உள்ளூர் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
NIA அதிகாரிகள் இந்தத் தாக்குதல் குறித்து நேரடியாக பத்திரிகையாளர்களிடம் பேசவோ அல்லது பொது அறிக்கைகளை வெளியிடவோ இல்லை. விசாரணையின் ரகசியத் தன்மை காரணமாக தகவலை வெளியிடாமல் இருந்து வருகிறது. ஆனால், ஆங்கில ஊடகங்களில் இந்த தகவல் கசிந்த நிலையில், 5 தீவிரவாதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில் உள்ளூர் தீவிரவாதிகளில் ஒருவர், கடந்த ஆண்டு IAF வாகனத் தாக்குதலில் (ஒரு கார்ப்பரல் பலி) ஈடுபட்டவர் என்று நம்பப்படுகிறது. மற்ற இருவர், பிஜ்பெஹாரா மற்றும் தோகர்போரா, குல்காம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 2017-ல் பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்று 2024-ல் திரும்பியவர்கள் எனவும் கூறப்படுகிறது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு பிர் பஞ்சால் மலைத்தொடரின் உயரமான பகுதிகளுக்கு தப்பி ஓடியதாகவும், சந்தேகிக்கப்படுகிறார்கள்.
தீவிரவாதிகள் எவ்வாறு காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் நுழைந்தனர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. கதுவா உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் சாத்தியம் உள்ளதா? எனவும் அது குறித்தும் விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் இடத்தில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் பைக் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இது தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரம் இல்லை எனவே அதனையும் அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளனர்.
தீவிரவாதிகள் சிறு குழுக்களாக செயல்படுவதால், அவர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது கடினமாக உள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ளூர் தீவிரவாதிகள் இல்லை என்றும், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது, இதனால் ஒவ்வொருவரையும் கண்காணிப்பது சவாலாக உள்ளது எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருவதால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.