இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் SRH வீரர் இஷான் கிஷான் அவுட் ஆகி வெளியேறியது சர்ச்சையாகி உள்ளது. அது அவுட் இல்லை என ரீபிளேவில் தெரியவந்துள்ளது.

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. SRH அணியின் முக்கிய வீரரான இஷான் கிஷான், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
SRH அணி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது, இரண்டாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் அவுட் ஆகினார். இதையடுத்து, மூன்றாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷானிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் தீபக் சாகர் வீசிய 3வது ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டாகினார். இந்த அவுட் முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, ஏனெனில் அது ரீபிளேயில் நாட் அவுட் என தெரியவந்தது.
இஷான் கிஷான், பந்து தனது பேட்டில் பந்து பட்டதாக நினைத்து, கள நடுவர் அளித்த அவுட் முடிவை அப்பீல் செய்யாமல் ஏற்றுக்கொண்டு பெவிலியனுக்கு நடந்தார். ஆனால், பின்னர் அல்ட்ரா எட்ஜ் (Ultra Edge) தொழில்நுட்பம் மூலம் பரிசோதிக்கப்பட்டபோது, பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவாகியது. மைதானத்தில் இருந்த MI வீரர்களும் அவுட் என அப்பீல் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் நடுவர் முடிவை அவுட் என்று அறிவித்தார். இது ஒரு தவறான முடிவு என்பது அல்ட்ரா எட்ஜ்-ல் தான் உறுதியானது.
கள நடுவர் முடிவை ஏற்று இஷான் கிஷான் பெவிலியன் திரும்பியதை மும்பை வீரர்கள் பாராட்டினாலும், இது SRH அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த அவுட் சர்ச்சை சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பலர் ஏன் இஷான் கிஷான் அப்பீல் செய்யவில்லை? அவர் இன்னும் தன்னை மும்பை இந்தியன்ஸ் வீரர் என நினைத்து விளையாடுகிறாரா என விமர்சித்து வருகின்றனர்.