ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற போராடிய இஸ்லாமிய தொழிலாளி சையது அடில் ஹுசைன் ஷா பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார்.

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழும் வேளையில் சமூக வலைதளத்தில் சிலர் இந்த தாக்குதலுக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினைரை குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதே தாக்குதலில் தான் அப்பாவி மக்களை காப்பாற்றும் பெரும் முயற்சியில் ஒரு இஸ்லாமிய தொழிலாளி தனது உயிரை இழந்துள்ள செய்தி மனிதம் காக்க இன்னுயிர் விட்ட உன்னத நிகழ்வாக மாறியுள்ளது.
பஹல்காம் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய தொழிலாளி சையது அடில் ஹுசைன் ஷா, அப்பகுதியில் குதிரையேற்றம் சவாரி தொழில் நடத்தி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். நேற்று வழக்கம் போல சுற்றுலா பயணிகள் மத்தியில் வேலை பார்த்து வந்த ஹுசைன் ஷா, திடீரென பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை துப்பாக்கிகளால் தாக்குவதை கண்டுள்ளார்.
உடனடியாக களத்தில் இறங்கி, பயங்கரவாதிகள் வசம் இருந்த துப்பாக்கிகளை பறிக்க முயன்றுள்ளார். இதில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சையது அடில் ஹுசைன் ஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சையது அடில் ஹுசைன் ஷா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டும் நபர் ஆவார். தற்போது அவரை இழந்துள்ளதால் சையது அடில் ஹுசைன் ஷாவின் மனைவி, குழந்தைகள், தாயார் ஆகியோர் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஷாவின் தாயார் கண்ணீர் விட்டு அழுதபடி, செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எங்களுக்கு இருந்த ஒரே ஆதரவு அவன்தான். அவன் குதிரைகளில் சவாரி செய்து குடும்பத்திற்காக பணம் சம்பாதித்தான். இப்போது எங்களுக்கு உதவ வேறு யாரும் இல்லை. அவன் இல்லாமல் நாங்கள் என்ன செய்யபோகிறோம் என்றே எங்களுக்கு தெரியவில்லை.” என்று வேதனை தழும்ப தெரிவித்தார்.
குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபரை இழந்துள்ள சையது அடில் ஹுசைன் ஷா குடும்பத்திற்கு அரசாங்கம் உரிய உதவியை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.