காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!
சவூதி அரேபியாவில் இருந்து டெல்லி வரும் பிரதமர் மோடி பாகிஸ்தான் வான் வழி பாதையை தவிர்த்துள்ளார். அதற்கு பதிலாக ஓமன், குஜராத் வழியாக டெல்லி வர உள்ளார்.

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் அமைப்பான TRF பொறுப்பேற்றுள்ளது.
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த இந்த கோர பயங்கவாத தாக்குதலுக்கு உள்ளூர் முதல் உலக அரங்கு வரை பலரும் தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றே காஷ்மீர் சென்று தாக்குதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அரசு முறை பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று ஜெட்டாவில் இருந்து டெல்லிக்கு திரும்புகிறார். சவூதி அரேபியாவில் இருந்து வழக்கமாக வரும் வான் பாதையில் இடையில் பாகிஸ்தான் இருக்கும். அந்நாட்டு வான் பாதை வழியாகவே பிரதமர் மோடி இந்தியா திரும்புவார்.
ஆனால், காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடியின் வான் வழியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் இருந்து ஓமன் வழியாக குஜராத் அடைந்து அவ்வழியாக டெல்லி செல்லும் வான் வழி பாதையை பயன்படுத்துகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி IAF போயிங் 777-300 (K7067) எனும் விமானம் மூலம் இந்தியா திரும்ப உள்ளார். இந்தியா வரும் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணியளவில் டெல்லியில் நடைபெறும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.