திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?
பாமக திமுக கூட்டணியில் இணையப்போகிறது என்கிற தகவல் உண்மையில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும் எழுந்துகொண்டு இருக்கிறது. ஏற்கனவே, அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்திருந்தது. இருப்பினும், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்பதற்கான விவரம் வெளியாகவில்லை.
இந்த சூழலில், பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் வெடித்திருந்த நிலையில், பாமக திமுகவுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தீ போல பரவி வந்தது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த காரணத்தாலும் இது குறித்து இரண்டு கட்சியை சேர்ந்தவர்கள் பேசாமல் இருந்த காரணத்தால் இந்த தகவல் ட்ரென்டிங் செய்தியாகவும் மாறியது. இதனையடுத்து, இந்த தகவல் முற்றிலும் வதந்தி என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தபோது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” கடந்த சில நாட்களாகவே விசிக திமுக கூட்டணியில் இருந்து விளங்குவதாகவும், பாமக திமுக கூட்டணியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறதை நான் பார்த்தேன். இந்த நேரத்தில் நான் இதற்கு விளக்கமும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இப்படியாக பரவும் தகவலில் உண்மையில்லை வதந்தி தான்.
மற்றபடி திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்த அரசு, கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அவர்களுடைய ஒத்துழைப்புடன் பல முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கூட்டணிக் கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன்” எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.