கருணாநிதிக்கு அதிமுக அரசு போட்ட பிச்சை …!திடீரென பல்டியடித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ…..!
ஜெயலலிதாவின் நினைவிடம் குறித்து திமுகவினர் பேசியதால் கருணாநிதி குறித்து பேசினேன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கருணாநிதி மறைவையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்படும் என்றும் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அப்போது தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்திருந்தார்.அவர் கூறுகையில், கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை. மேல்முறையீடு செய்திருக்கலாம், ஆனால் நாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறிய இந்த கருத்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் முகம் சுழிக்க வைத்தது.
தற்போது அவர் கூறிய கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கருணாநிதி குறித்து பேசியது தவறுதான். ஜெயலலிதாவின் நினைவிடம் குறித்து திமுகவினர் பேசியதால் கருணாநிதி குறித்து பேசினேன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.