DC vs MI : வெற்றிப் பாதையில் மும்பை.., முதல் தோல்வியில் டெல்லி! முக்கிய சம்பவங்கள் இதோ…

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியின் முக்கிய அம்சங்கள் பற்றி காணலாம்.

DC vs MI - IPL 2025

டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்-ல் தோல்வியடையாத டெல்லி அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 33 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 59 ரன்கள் எடுத்தார். ரியான் ரிக்கெல்டன் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும், நமன் திர் (நாட் அவுட்) 38 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

206 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் கருண் நாயர் 40 பந்துகளில் 12 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி 89 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். ஆனால், அவரது விக்கெட் 12வது ஓவரில் மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சில் வீழ்ந்த பிறகு டெல்லியின் பேட்டிங் சரிவைச் சந்தித்தது.

ஆரம்பத்தில் தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்ர்க் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அபிஷேக் போரல் (33 ரன்கள்) மற்றும் நடப்பு தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் (15 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளும் அடுத்தடுத்து விரைவாக வீழ்ந்தன.

ஆட்டத்தை மாற்றிய ஆட்ட நாயகன் கரண் சர்மா :

MI வீரர் கர்ண் ஷர்மாவின் பந்துவீச்சு மும்பையின்  வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. கர்ண் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக் கொடுத்து கே.எல்.ராகுல், அபிஷேக் போரல், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆட்டத்தை மாற்றிய ரன் அவுட்கள் :

ஜஸ்பிரித் பும்ராவின் 19-வது ஓவரில் அசுதோஷ் ஷர்மா, குல்தீப் யாதவ், மோஹித் ஷர்மா மூன்று ரன்-அவுட்கள்  நிகழ்ந்தன. இது டெல்லியின் தோல்வியை உறுதி செய்தது. இதில் அசுதோஷ் ஷர்மா மட்டும் 17 ரன்கள் அடித்து டெல்லிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் ரன்-அவுட்டால் 19வது ஓவரில் வெளியேறினார்.

பந்து மாற்றம் :

13-வது ஓவருக்குப் பிறகு ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பந்து மாற்றப்பட்டது. இது பந்து பிடிப்பை மேம்படுத்தி, ஸ்பின்னர்களுக்கு உதவியாக இருந்தது, குறிப்பாக கர்ண் ஷர்மாவுக்கு. இதனை அவரே ஆட்டம் முடிந்த பிறகு இறுதியில் தெரிவித்தார்.

புள்ளிப்பட்டியல் :

நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வி காணாத டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதல் தோல்வியை கொண்டுள்ளதால், ஒரு இடம் கிழே இறங்கியுள்ளது. 5 போட்டிகளில் 4இல் வெற்றி ஒரு தோல்வி என 8 புள்ளிகள் (ரன் ரேட் : +0.899) உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகள் (ரன்ரேட் : +1.081) உடன் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகள் விளையாடி 2 வெற்றி 4 தோல்வி என 4 புள்ளிகள் (+0.104) உடன் 7வது இடத்திற்கு சற்று முன்னேறி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்