ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு …!செப்டம்பர் 24ஆம் தேதி முதல் கூட்டம்…!
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் தருண் அகர்வாலா தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்டம்பர் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தமிழக அரசு உத்தரவின்பேரில், மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, வேதாந்தா குழுமம் சார்பில், டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்படலாம் என்று அனுமதியளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், அதேநேரத்தில் எந்த விதமான உற்பத்தி பணிகளும் கண்டிப்பாக நடைபெறக் கூடாது என உத்தரவிட்டது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.
இந்த குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்த குழு 2 வாரங்களில் பொறுப்பேற்றுக் கொண்டு, 6 வாரங்களில் ஆய்வுகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் தருண் அகர்வாலா தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்டம்பர் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
அதேபோல் குழு தலைவர் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹாலில் காலை 10 மணிக்கு விசாரணையை தொடங்குகிறது.
விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகி கருத்து கூறலாம் என பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.