“இனி நான் தான் தலைவர். அன்புமணி அல்ல.!” ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு!
பாமக தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக மட்டும் செயல்படுவார் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக டாக்டர் ராமதாஸ் இருந்தாலும், கட்சியை வழிநடத்தும் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார்.
இப்படியான சூழலில், ” கட்சியின் நிறுவனர் எனும் பொறுப்பில் இருக்கும் நானே, கட்சித் தலைவராக பொறுப்பேற்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் செயல்படுவார். அடுத்தடுத்த முடிவுகள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை அழைத்து பொதுக்குழு, செயற்குழுவில் முடிவு செய்யப்படும்.” என முக்கிய அறிவிப்பை அறிவித்தார்.
முன்னதாக, 2024 டிசம்பரில் நடைபெற்ற கட்சி நிகழ்வில், ராமதாஸின் மகள்வழி பேரன் முகுந்தன் பரசுராமை இளைஞர் பிரிவில் முக்கிய நிர்வாகியாக அறிவித்தார். இதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பபை காட்டி, பாதியில் வெளியேறினார். அப்போது முதல் தந்தை – மகன் இடையேயான பனிப்போர் இருந்து வந்தது. அதன் பிறகு கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு இந்தஉட்கட்சி பிரச்சனை சரியாகிவிட்டது என அனைவரும் நினைத்திருந்த நிலையில், தற்போது ராம்தாஸ் வெளியிட்ட இந்த அறிவிப்பு பாமகவினருக்கு அதிர்ச்சியை அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது என்றே கருதப்படுகிறது.