குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!
மறைந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி ஆனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார். வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குமரி அனந்தன் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் என பலரும் நேரில் சென்று குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவை அடுத்து இன்று தமிழக சட்டப்பேரவையில் மறைந்த குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அதனை அடுத்து, குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவற்ற செய்தியை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வேதனையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளதோடு, மறைந்த குமரி அனந்தன் அவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய குமரி அனந்தன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் “தகைசால் தமிழர்” கடந்த ஆண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்காக வாழ்ந்திட்ட குமரி அனந்தன் அவர்களின் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.