என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!
பெங்களூருக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக இருந்து வருவது போல மற்றொரு பக்கம் மும்பை அணியின் முக்கிய வீரர் ரோஹித் ஷர்மா தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது கூடுதலான சோகத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே ரோகித் சர்மா பழைய ஹிட் மேன் போல அதிரடி காட்ட திணறி வருகிறார்.
முதல்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 0, அதற்கு அடுத்ததாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 13 ரன் 30 ரன்கள் கூட தாண்டவில்லை. இதன் காரணமாக அவருடைய கம்பேக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தார்.
அதனைத்தொடர்ந்து இன்று நடைபெறும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குவார் என கூறப்பட்ட நிலையில், அதைப்போலவே இம்பாக்ட் பிளேயராக ரோஹித் இறங்கினார். எனவே, இன்று நிச்சயமாக ரோஹித் சர்மா பேட்டில் இருந்து பெரிய ஸ்கோர் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றயை போட்டியிலும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மா 1 சிக்ஸர் 1 பவுண்டரி என விளாசி அதிரடி காட்டினார். ஆனால், அந்த அதிரடி தொடரவில்லை. யாஷ் தயாள் வீசிய பந்தில் போல்ட் ஆகி ரோஹித் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கடுப்பான ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் என்ன நீங்க இப்படி விளையாடுறீங்க? என கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கிவிட்டார்கள்.