MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?
பெங்களூர் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலியை மும்பை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 முறை விக்கெட் எடுத்துள்ளார்.

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் எதிர்பார்த்த பும்ரா அணிக்கு திரும்பவுள்ளதால் போட்டி இன்னும் சுவாரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால், பெங்களூர் அணிக்கு எதிராக அதுவும் விராட் கோலிக்கு எதிராக பும்ரா சிறப்பான பார்மில் இருக்கிறார்.
இதுவரை அவருக்கு எதிராக விராட் கோலி எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறார். பதிலுக்கு பும்ரா அவரை எவ்வளவு முறை ஆட்டமிழக்க செய்திருக்கிறார் என்பது குறித்து பார்ப்போம்.
பும்ரா கடந்த 2013-ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் விளையாடிய போது தான் அறிமுகமானார். அவர் அறிமுகமான அந்த போட்டி பெங்களூரு அணிக்கு எதிராக தான் நடைபெற்றது. போட்டியில் தன்னுடைய முதல் விக்கெட்டாக கோலியை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் அவர் கோலியை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்துஅசத்தியது அவருடைய பெயரையும் வெளியே கொண்டு வர பெரிய அளவில் உதவி செய்தது.
அந்த ஆண்டை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு முதல் 2018 வரை பும்ராவுக்கு எதிராக கிங் கோலி தான் ஆதிக்கம் செலுத்தினார் என்று கூறலாம். ஏனென்றால், 2018 வரை பும்ராவுக்கு எதிராக 99 ரன்கள் எடுத்திருந்தார். ஒரே ஒரு முறை மட்டுமே ஆட்டமிழந்தார். அதன்பிறகு 2019 முதல் பும்ரா, கோலியை 3 முறை ஆட்டமிழக்கச் செய்து, அவரது சராசரியை 10.2 ஆகக் குறைத்தார். அதன்பிறகு, 2024ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விராட் ஒரு சதம் அடித்திருந்தாலும், பும்ரா அவரை மீண்டும் ஒரு முறை வீழ்த்தி, அவரை 5-வது முறையாக விக்கெட்டுகள் எடுத்து அந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார்.
மொத்தமாக இதுவரை விராட் கோலிக்கு எதிராக பும்ரா 16 இன்னிங்ஸ் விளையாடியிருக்கும் நிலையில் மொத்தம் 5 முறை விக்கெட் எடுத்துள்ளார். விராட் கோலி அவருக்கு எதிராக 140 ரன்கள் எடுத்துள்ளார்.கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பும்ராவுக்கு எதிராக 147.36 ஆக உள்ளது. எனவே இருவரும் சிறப்பான பார்மில் இருப்பதால் இன்றயை போட்டியில் என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.