“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?
தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதிப்பங்கீடு கோரிக்கைகள் குறித்து ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம் செய்திருக்கிறார்.

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே சுமார் ரூ.550 கோடி செலவில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தப் பின், ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, ‘வணக்கம், என் அன்பு தமிழ் சொந்தங்களே’ எனக்கூறி தமிழில் உரையை தொடங்கினார்.
இந்த விழாவில், விழாவில் ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் பங்கேற்றனர். விழாவில் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி,” ராமநவமி நாளான இன்று அயோத்தியில் சூரிய திலகம் தெரிந்தது.
இன்று ராம நவமி என்பதால் என்னுடன் சேர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குங்கள். தமிழ்நாட்டின் சங்க இலக்கியங்களில்கூட ராமர் பற்றி கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் ராமநவமி நல்வாழ்த்துக்கள்” எனக்கூறி, “ஜெய் ஸ்ரீ ராம்” என மூன்று முறை முழங்கினார்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டவை புதிய பாம்பன் பாலம் மூலம் கிடைக்கும். எங்கள் ஆட்சியில் பாம்பன் பாலம் திறக்கப்பட்டதில் மகிழ்ச்சி, சுலப வியாபாரம், சுலப பயணத்திற்கு பாம்பன் பாலம் உதவிகரமாக இருக்கும். தமிழ்நாட்டின் கட்டமைப்பே மத்திய அரசின் முதன்மை நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் 7 மடங்கு அதிக நிதி ஒத்துக்கப்பட்டுள்ளது.
2014-க்கு முன்பு ரயில்வே துறையில் குறைவாகவே தமிழ்நாட்டிற்கு நிதி கிடைத்தது, அப்போதெல்லாம் கூட்டணியில் யார் இருந்தார்கள் என நான் சொல்லத் தேவையில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 3 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கும் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஏழை மக்களுக்காக 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களுக்கு குழாய் வழியே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியதோடு, இதெல்லாம் செய்த பிறகும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள், அவர்களுக்கு அழுவதற்கு மட்டுமே தெரியும், அழுது விட்டு போகட்டும்” என்றார்.
இவ்வாறு, தமிழ்நாட்டை ஆளும் திமுக-வை மறைமுகமாக சாடியுள்ளார் என்பது தெளிவாகிறகது. மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. மேலும், தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதியை இன்னும் தரவில்லை என்று தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.