‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!
திமுகவினர் பொட்டு வைப்பது குறித்து ஆ.ராசா பேசியது அவரின் சொந்தக் கருத்து என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, “சாமி கும்பிடுங்க வேணானு சொல்ல வில்லை.
ஆனால், திமுக வேட்டிய கட்டும் போது பொட்டு வைக்க வேண்டாம், நீங்களும் நெற்றியில் பொட்டு வைத்து, கையில் கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைதான் செய்கிறார்கள் யார் சங்கி, யார் திமுகவினர் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்” என்று பேசியிருந்தார்.
இதையடுத்து, தமிழ் மக்களின் ஆன்மீக நடைமுறைகளை இழிவுபடுத்துவதாகவும், சமூகங்களிடையே பிரிவினையைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டி, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ஏ.என்.எஸ். பிரசாத் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், இந்துக்களின் வாக்குகள் மட்டும் திமுகவுக்கு வேண்டும்? ஆனால் இந்துக்களின் சமய அடையாளங்கள் வேண்டாமா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சரமாரி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பொட்டு வைக்க வேண்டாம் என சொன்ன ஆ.ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து, எங்கள் தலைவர் அப்படியெல்லாம் சொல்லவில்லை” என்று கூறியுள்ளார்.