குறைந்தது வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் வணிகர்கள்!
சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது.

சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL), மற்றும் பாரத் பெட்ரோலியம் (BPCL) போன்றவை ஒவ்வொரு மாதமும் குறைத்தும் விலையை உயர்த்தியும் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.
சென்னையில், முன்பு 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.1,965 ஆக இருந்தது. இப்போது ரூ.43.50 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.1,921.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆகவே தொடர்கிறது. வீட்டு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருவதால், அவற்றின் விலையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதில்லை.
இந்த சூழலில் தற்போது 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது சென்னை போன்ற பெருநகரத்தில், உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள், மற்றும் பிற சிறு உணவு வணிக நிறுவனங்கள் அதிக அளவில் 19 கிலோ சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன. ஒரு சிறிய உணவகம் மாதத்திற்கு 2 முதல் 5 சிலிண்டர்களை பயன்படுத்துவதாக கணக்கிட்டால், இந்த விலை குறைப்பு அவர்களுக்கு மாதம் ரூ.87 முதல் ரூ.217.50 வரை சேமிப்பை ஏற்படுத்தும் என்பதால் விலை குறைப்பால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும், கடந்த சில மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. உதாரணமாக, ஜனவரி 2025-ல் சென்னையில் 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.1,980 ஆக உயர்ந்திருந்தது. பிப்ரவரியில் சிறிய குறைப்பு ஏற்பட்டு ரூ.1,965 ஆனது. இப்போது மீண்டும் ரூ.1,921.50 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.