இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல! ATM சேவைக்கான கட்டண உயர்வு…கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல் என ATM சேவைக்கான கட்டண உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ATM withdrawal tn

சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை எல்லைக்கு மேல் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது வங்கிகள் ரூ.23 வரை கட்டணம் விதிக்கலாம் என்று அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை வங்கி கணக்குகள் தொடங்க ஊக்குவித்த மத்திய அரசு, பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம், குறைந்த இருப்புக்கு அபராதம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது ஏடிஎம் பணம் எடுப்பதற்கும் கட்டணம் விதிப்பது மக்களுக்கு சுமையாக அமையும் என விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள்.

தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும்.  குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.

ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்