“வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா முஸ்லீம்களை வஞ்சிக்கிறது!” பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
மத்திய அரசின் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் தாக்கல் செய்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. பாஜக மட்டும் வெளிநடப்பு செய்த நிலையில் அதிமுக, பாமக என அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ள வக்பு வாரிய சட்டதிருத்ததிற்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு முக்கிய திருத்தங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பட்பட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.
இப்படியான சூழலில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் இது தொடர்பன தீர்மானத்தை சட்டமன்றத்தில் வாசித்தார். அவர் பேசுகையில், ” வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் ஒற்றுமையோடு வாழும் நாடு இந்தியா. அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், மத்திய பாஜக கூட்டணி அரசு தங்கள் செயல்பாடுகளை ஒருவித உள்நோக்கத்தோடு செய்து வருகிறது. எதனை செய்தாலும் குறிப்பிட்ட மக்களை வஞ்சிக்கும் வகையில் தான் திட்டங்களை தீட்டுகிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டமானது சிறுபான்மை மக்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சித்தது. இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது. சமூக நீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது.
நீட் மற்றும் தேசிய கல்வி கொள்கை மூலம் அடித்தட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்து இருப்பதை அனைவரும் அறிவோம். இந்த வரிசையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய திருத்த சட்டமானது சிறுபான்மையின இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதற்கான தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தீர்மானம் :
வக்பு வாரிய சட்டமானது 1954ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் இதில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் இன்றைய ஒன்றிய பாஜக கூட்டணி அரசு, வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான முன் வரைவினை கடந்த 8.8.2024-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்பு வாரியத்தில் அரசியல் தலையீட்டை ஆதரிக்கும் வகையிலும், மத உரிமைகளை பாதிப்பதாகவும் ஒன்றிய அரசின் சட்டங்கள் இருந்ததால் அதனை திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம்.
எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள். இந்த சட்டத்தை எதிர்ப்பதற்கு நமக்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம் ஏற்படும் சில மோசமான விளைவுகளை இதில் தெரிவிக்கிறேன்.
மோசமான விளைவுகள் :
மத்திய வக்பு வாரியம், மாநில வக்பு வாரியத்தின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு, அதில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்பு நிறுவனத்தின் சுய ஆட்சியை பாதிக்கும். வக்பு வாரிய நில அளவு செய்யும் அதிகாரம் நில அளவரிடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வக்பு வாரிய நிலம் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் வக்பு வாரியத்திடம் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
வக்புகளை செல்லாது என்ற அச்சம்
அரசு சொத்து என அடையாளம் காணப்பட்ட வக்பு சொத்து இந்த சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்பு சொத்தாக கருதப்படாது என்று இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டமானது சொத்துக்களை மறுவரையறை செய்யும் அதிகாரம் அளிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இஸ்லாமியத்தை பின்பற்றியவர் மட்டுமே வக்பு அறிவிக்க முடியும் என கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லீம் அல்லாத மக்களால் அறிவிக்கப்பட்ட வக்புகளை செல்லாது என்று அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தை உண்டு செய்கிறது.
நிர்வாகத்தில் அரசு தலையீடு
இஸ்லாமிய மக்களில் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு தனி சொத்து வாரியம் அமைக்க முயற்சி செய்கிறார்கள். மாநில வக்பு வாரிய உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் தேர்தல் செய்து தேர்வு செய்யும் உரிமை ரத்து செய்ப்படுகிறது. மாநில வக்பு வாரியத்தில் 2 இஸ்லாமியர்கள் அல்லாத நபர்களை சேர்க்க சொல்லி கட்டாயப்படுத்துகிறது. இது இஸ்லாமியர்களின் நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும். இது வக்பு வாரிய சொத்துக்களை அரசு கைப்பற்றிவிடுவதாக அச்சப்படுகிறார்கள்.
வக்பு வாரிய சட்டப்பிரிவு 40-ஐ நீக்குவது, வக்பு வாரிய சொத்து அடையாள அதிகாரத்தை மாற்றி அதனை அரசுக்கு அளிக்கிறது. இது அவர்களின் மத சுதந்திரத்தை மீறுவதாகும்.
கூட்டுக்குழு நிராகரிப்பு
இதனை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் 30.9.2024 அன்று நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம் பெற்று இருக்கும் திமுக உறுப்பினர்கள் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா அவர்களும் கடுமையாக தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளார். திமுக மட்டுமல்லாமல் எதிர்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சி ஆலோசனைகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிராகரித்துள்ளது.
மேலும் அந்த கூட்டுக்குழு கொண்டு வந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் வாங்கிவிட்டது. இதனால் அந்த சட்ட மசோதா எந்த நேரத்திலும் தாக்கல் செய்யலாம் என்ற நிலையில் இந்த தீர்மானம் மிக அவசியமானதாகும். வக்பு வாரியத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. காலபோக்கில் இது வக்பு வாரியத்தையே முடக்கிவிடும். எனவே இதனை எதிர்க்க வேண்டும். இதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இந்திய நாட்டில் மக்கள் மதநல்லிணக்கத்தோடு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அணைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்கி இருக்கின்றன. இதனை பேணி காக்கும் கடமை தேர்வு செய்யப்பட்ட கடமை, ஆளும் அரசுக்கு உள்ளது. வக்பு திருத்த சட்ட மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என நான் முன்மொழிகிறேன். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதனை அடுத்து, பாஜக வெளிநடப்பு செய்த நிலையில் மற்ற கட்சிகள் அதிமுக, பாமக உட்பட பல்வேறு கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.