ரூ.7 கோடி கொடுங்க., வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் பண்ணுங்க.! டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
வீர தீர சூரன் பட ரிலீஸ்க்கு எதிராக மும்பையை சேர்ந்த நிறுவனம் தொடுத்த வழக்கில், ரூ.7 கோடி டெபாசிட் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி : விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தில் மும்பையை சேர்ந்த B4U எனும் நிறுவனம் நிதி அளித்து முதலீடு செய்திருந்தது. பட தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தேதிக்குள் OTT உரிமையை விற்காததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி 50% நஷ்டஈடு தரவேண்டும் என கூறி பட ரிலீசுக்கு தடை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி வரை வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதனால் இன்று படம் ரிலீஸ் ஆகுமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். இப்படியான சூழலில் இன்று காலை நடந்த வழக்கு விசாரணையில் நீதிபதி அமர்வு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, B4U நிறுவன நஷ்டத்தை குறிப்பிட்டு ரூ.7 கோடி டெபாசிட் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யலாம் என பட தயாரிப்பு நிறுவனத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களை 48 மணிநேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.7 கோடி டெபாசிட் செய்து படத்தை வெளியிடுமா தயாரிப்பு நிறுவனம், அல்லது நீதிமன்றத்தில் மேலும் விசாரணைக்கு முறையிடுமா என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது வரை பட ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.